கடலூர்: ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணமூர்த்தி. இவர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் உள்ள செப்டிக் டேங்க் சென்டரிங் பிரிக்கும் பணியில் கட்டட கொத்தனார் பாலசந்தர், சக்திவேல் உடன் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி இருந்துள்ளார்.
அப்போது கட்டட கொத்தனார் பாலசந்தர் (32) என்பவர் விஷவாவு தாக்கி உள்ளே விழுந்துள்ளார். அதனையறிந்து, உடனடியாக அவரை மீட்க சக்திவேலும் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியும் காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாயு தாக்கி செப்டிக் டேங்க் உள்ளே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 3 பேரும் விஷவாயு தாக்கிய உயிரிந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் மூவரும் வராத நிலையில் அருகில் இருந்தவர்கள் தேடி சென்று பார்த்தபோது மூவரும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து 3 பேரின் உடலை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தற்போது மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் இச்சம்பவம் குறித்து ஶ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது முறையான பாதுகாப்பு இல்லாமல் 3 பேர் விஷவாவு தாக்கிய உயிரிழந்த நிலையில், கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கார் விபத்து: ராணிப்பேட்டையில் இரு சிறுமிகள் பலி!