கடலூர்: வள்ளலாரின் 200ஆவது பிறந்த நாள் விழா, இந்திய சுதந்திர பொன்விழா ஆண்டு மற்றும் காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற்று கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த பேரணி இன்று நடத்தப்பட்டது. மீதமுள்ள 47 இடங்களில் வெளிப்புறத்தில் பேரணி நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, அங்கு பேரணி நடைபெறாது என ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இன்று (நவ.6) கடலூரில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 1200 போலீசார் கடலூரில் காலை முதல் குவிக்கப்பட்டனர். மேலும், திருப்பாதிரிப்புலியூர் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் போலீசார் காலை முதல் பேரணி நடைபெறும் வழிகள் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். இந்த நிலையில் மாலை 4 மணிக்கு தண்டபாணி செட்டியார் தெருவில் இருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டு மூன்று கிலோமீட்டர் வரை என 37 நிமிடங்களில் நடந்தது.
மேலும், உயர்நீதி மன்ற உத்தரவின் படி, இவர்கள் கையில் தடி உள்ளிட்ட எந்த ஒரு ஆயுதங்களையும் வைத்திருக்கவில்லை. மேலும், அமைதியான முறையில் இந்த பேரணி நடைபெற்றது. இதில் காக்கி கலர் பேண்டும், வெள்ளை கலர் சட்டையும் அணிந்திருந்த நிலையில் அனைவரும் தொப்பி அணிந்து சீருடையுடன் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
அதன் பிறகு சிறிய அளவிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸின் கொள்கைகள் என்ன? அதனை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த பேரணியின் வீடியோ மற்றும் போட்டோக்களை உயர்நீதி உச்சநீதிமன்றத்தில் கொடுத்து அமைதியான முறையில் மற்ற 47 இடங்களிலும் பேரணி நடத்துவதற்கான அனுமதியை பெறுவோம் என ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணாமலையைக் கைது செய்ய வலியுறுத்தி திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்