கடலூர்: தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று (மார்ச் 28) நள்ளிரவு 21 வயது இளம்பெண் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அரோக்கியராஜ் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
காதலனுடன் தனிமை: பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருந்த இளம்பெண் காவல் துறையினரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். அதைக் கேட்ட காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் இளம்பெண் தனது காதலனுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை: அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள் இருவரையும் ஒன்றாக செல்போனில் படம் பிடித்து மிரட்டியுள்ளனர். இளம்பெண்ணின் காதலனை 2 இளைஞர்கள் பிடித்துக்கொள்ள காதலன் கண் எதிரே அந்தப்பெண்ணை ஒரு இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இளம்பெண்ணுக்கு சிகிச்சை: காதலனிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மூன்று இளைஞர்கள் மிரட்டி அனுப்பியதாக காவல் துறையினரிடம் அந்தப்பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பெண்ணின் காதலனை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்கள் யார் என்று தெரியவில்லை எனக் காதலன் கூறியுள்ளார். பின்னர் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த நபர்களை காவல் துறையினர் அழைத்து வந்து காதலனிடம் காண்பித்தனர்.
சிக்கிய 3 இளைஞர்கள்: அப்போது காதலியை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை காதலன் அடையாளம் காண்பித்தார். மேலும் 3 இளைஞர்கள் செல்போன் மற்றும் காதலன் செல்போனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் (19), சதிஷ் (19), புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆரிப் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது.
விழுப்புரம் சரக டிஜஜி விசாரணை: அந்த 3 இளைஞர்களிடம் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் ஆகியோர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் சினிமா பட பாணியில் காதலன் முன்பு காதலியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா வேட்டையை தொடங்க வேண்டும் - காவல் துறைக்கு டிஜிபி உத்தரவு