தமிழ்நாடு முழுவதும் டிஎன்சிஎஸ்சிக்கு இணையாக நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கடலூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டுறவுத்துறை ரேஷன் கடை பணியாளர்கள் சார்பில், சரியான எடையில் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியர் ஒருவர் சரியான விலையில் பொருள்களை வாங்க வேண்டுமானால் அமைச்சரிடம் கேட்டு வழங்குவோம் என்று தெரிவித்தார். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை.
போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்ட பின்பு, கார்டுகளின் எண்ணிக்கைக்கேற்ப பொருள்களும் வழங்கப்படுவதில்லை. குறைவாக பொருள்களை வழங்கி விட்டு, ஆய்வு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரேஷன் கடை பணியாளர்களை கூட்டுறவுத்துறை நிர்வாகம் சித்ரவதை செய்து வருகிறது. டிஎன்சிஎஸ்சிக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம், பணிவரன்முறை உள்ளிட்ட பணியாளர்கள் கோரிக்கைகளுக்கும் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகு அரசாங்கம் ஒரு கமிட்டியை நியமித்தது.
அந்த கமிட்டி 20 பரிந்துரைகளைக் கொடுத்தது. இதனையடுத்து அந்த பரிந்துரைகள் மீது சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளோம். 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதுகுறித்த அறிக்கை கொடுத்த போதிலும் கடந்த 10 மாதங்களாக அந்த கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதனால், செப்டம்பர் 17ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டமும், நவம்பர் 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தி வருகிறோம் இனிமேலும் அரசு மெத்தனமாக செயல்பட்டால் போராட்டம் வலுப்பெறும். எனவே, முதலமைச்சர் எங்களது சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: