கடலூர்: தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் 17 ஆம் தேதி நெய்தல் கோடை விழா தொடங்கியது. இதையொட்டி சில்வர் பீச்சில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கு வசதியாக ராட்டினம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல்வேறு குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட், லேபர் டாக், அஸ்கி, டாபர் மேன், அலங்கு, கிரேட் டேன் உள்ளிட்ட 17 வகை இனங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் மோப்ப நாய்கள் பிரிவில் உள்ள 2 நாய்களும் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தின.
கண்காட்சியின் முடிவில் நரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான அஸ்கி இனத்தை சேர்ந்த நாய் முதல் பரிசையும், தினேஷ் என்பவருடைய கிரேட் டேன் நாய் 2ஆவது பரிசையும் பெற்றன. இதையடுத்து நாய்களின் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பரிசு வழங்கினார். போலீஸ் மோப்ப நாய் பிரிவை சேர்ந்த நாய்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் நாட்டிய பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நாடகம், முல்லை கோதண்டம் காமெடி நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து மகிழ்ச்சியான வாழ்வை தீர்மானிப்பது வீட்டு சூழலே-சமுதாய சூழலே என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனியின் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்த விழாவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். மேலும் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: உச்சகட்டத்தில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் - வெல்லப்போவது யார்..?