கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலை, வேப்பூரில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலைகள், கடலூர், அரியலூர் உள்ளிட்டப் பல பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு பாக்கித்தொகை வழங்க விவசாயிகளுக்குத் தெரியாமல் சர்க்கரை ஆலை நிர்வாகம் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெயரில் வங்கியில் கடன் பெற்று 600 கோடி கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதனை ஆலை நிர்வாகம் கட்டத் தவறியதால் வங்கியில் இருந்து விவசாயிகள் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் வந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கரும்பு விவசாயிகள் ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் பெயரில் வாங்கியுள்ள வங்கிக் கடன்களை ஆலைகளின் பெயரில் மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், மூடப்பட்டுள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசு ஏற்று நடத்த வேண்டும். விவசாயிகள் பெயரில் கடன் பெற்று மோசடி செய்த சர்க்கரை ஆலை அதிபர் ராம்தியாகராஜன் என்பவரை கைது செய்யக் கோரியும், நடப்பாண்டுக்கான அரசு வழங்க வேண்டிய கரும்பு தொகையை தீபாவளிக்குள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: