தமிழ்நாடு மாநில இறகு பந்து கழகம், கடலூர் மாவட்ட இறகுப்பந்து நலக் கழகம் இணைந்து நடத்திய 10 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான இறகுபந்து போட்டி, கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிக்கு மாநிலத் துணைத் தலைவர் ராஜேஷ் பாபு தலைமை தாங்க, மாவட்ட செயலாளர் ஓம்பிரகாஷ் வரவேற்றார். கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
சென்னை, கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இருந்து 129 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இது ஆண்கள், பெண்கள் ஒற்றையர் இரட்டையர் என 4 பிரிவுகளின் கீழ், கடந்த 4 நாட்களாக 157 போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சென்னையை சேர்ந்த தீக்ஷிதா மற்றும் திக்சா முதல் இடம் பிடித்தனர். அதேபோல், ஆண்கள் இரட்டையர் பிரிவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோகித் தர்ஷன் மற்றும் யோகேஸ்வரன் முதல் இடத்தை பிடித்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னையின் லக்சா முதலிடத்தையும், மதுரையை சேர்ந்த மிருதினி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் சிவசரண் முதலிடத்தையும், யோகேஸ்வரன் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.