மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 38 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியதையடுத்து, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மக்களவைத் தொகுதிகளின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமையன்று கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன் எம்.பி, "கலைஞர் போன்ற ஆளுமை, வலிமை மிக்க தலைவராக ஸ்டாலின் உள்ளாரா என பொது தளத்தில் இருந்து பலர் கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடந்து முடிந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களைில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆகையால் அவர் மறைந்த கலைஞர் இடத்தை மட்டுமல்ல முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெற்றிடத்தையும் நிரப்பியிருக்கிறார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு முழு வெற்றி காத்திருக்கிறது. ஸ்டாலின் தேர்தல் வியூகத்தை சிறப்பாக வகுக்கிறார். எதிரிகளுக்கு ஒரு வாய்ப்புகூட வழங்கக்கூடாது என்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினார். எதிர்காலத்திலும் மு.க.ஸ்டாலின் சிறப்பான வெற்றியைப் பெறுவார்” என்றார்.
கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்ட திமுக செயலாளர்கள், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மக்களவைத் தொகுதி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.