வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறும். இதில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பார்கள்.
அதேபோல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.
அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாலைகரை தெரு பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் கோவிந்தராஜ் (75) இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பின்னர் தான் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றித் தீக்குளிக்க முயற்சிசெய்தார். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த அலுவலர்கள் அவரை மீட்டனர்.
கோவிந்தராஜின் மனுவில் கூறியிருப்பதாவது:
எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அதில் மூன்று மகன்களால் எனக்கு எவ்வித உதவியும் இல்லை. கடைசி மகன் நித்தியானந்தம் மட்டுமே என் தேவைகளைப் பூர்த்திசெய்து நான் வாழ்வதற்கு வேண்டிய வசதிகளைச் செய்துவந்தான். இந்த நிலையில் நித்தியானந்தம் வெளிநாடு சென்று அனுப்பிவைத்த பணத்தில் நான் ஒரு மாடி வீடு கட்டினேன்.
அந்த வீட்டை நித்தியானந்தன் பெயருக்கு எழுதிவைத்தேன். இதைக்கண்ட எனது மூத்த மகன் சுகுமார், மற்றொரு மகன் ரெங்கநாதன் இருவரும் சேர்ந்து நித்தியானந்தம், அவரது மனைவி, இரு குழந்தைகள் ஆகியோரை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டைக் கைப்பற்றினர்.
என்னையும் வீட்டை விட்டு வெளியேற்றிய காரணத்தால் நான் கிள்ளை ரயில் நிலையத்தின் பின்புறத்தில் இருந்துவருகிறேன். இந்த இடத்திலும் அவர்கள் வந்து என்னை அடித்து உதைத்து தாக்கினர். இதனைக் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தேன். இதேபோல் பலமுறை என்னைத் தாக்கியுள்ளனர்.
தற்போது என் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழ்ந்துவருகிறேன். இரு மகன்களும் அடித்து துன்புறுத்திய காணொலி செல்போனில் பதிவு செய்துவைத்துள்ளேன். ஆட்சியராகிய தாங்கள் வீட்டை மீட்டு தருமாறும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டிருந்தது.
இதுபற்றி காவல் துறையினர் கூறும்போது, ”முதியவர் கோவிந்தராஜின் நிலத்தை தொடர்ந்து யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் எனக் கூறி முதியவரை அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளோம்" என்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.2 லட்சம் கொள்ளை