கடலூர் செம்மங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பயோனியர் ஜெல்லீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாண்டியகெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் வாழ்வுரிமை சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரு தொழிற்சாலைகளில் தொழிலாளர் விரோதப்போக்கை கடைபிடித்து வருவதாகவும், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் தொழிற்சாலைக்கு ஆதரவான செயலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இதனைக் கண்டித்து தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக இக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயற்சி நடைபெற்றது.
சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், சுமூகத் தீர்வு ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. நாட்கள் கடந்தும் இன்றுவரை சுமூக தீர்வு ஏற்படவில்லை. அலுவலர்களும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியினர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதில், தொழிற்சாலையின் நிர்வாகத்தைக் கண்டித்து பதாகைகளையும், முழக்கங்களையும் எழுப்பினர். அத்தோடு இதுதொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று, பின் விடுவித்தனர்.
இதையும் படிங்க : காந்தி மார்கெட்டை அழிக்கக்கூடாது - அரசுக்கு வியாபாரிகள் வேண்டுகோள்!