கடலூர்: புவனகிரி தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதலங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தரையில் அமர வைத்த ஊராட்சி துணைத் தலைவர் மோகன் ராஜன் தலைமறைவாகியுள்ள நிலையில், ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (அக்.16) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ஜூலை மாதம் 17ஆம் தேதி ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெறும்போது, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்து இருந்ததாகவும், ஊராட்சி செயலாளர் சிந்துஜா கூட்டம் முடிந்து சென்ற பிறகு, ஊர் பிரச்னை பேசுவதற்காக அனைவரும் கூடி இருந்த சமயத்தில், திட்டமிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியின் கணவர் சரவணகுமார் புகைப்படம் எடுத்துள்ளார் என்றும், ஊராட்சி மன்ற தலைவருக்கும், துணைத் தலைவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து, ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:"ஆதிதிராவிடர் என்பதால் தரையில் உட்கார வைக்கிறார்கள்" - ஊராட்சித் தலைவரின் கணவர் பேட்டி