நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது.
இதன் காரணமாக கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அன்புச்செல்வன் தலைமையில் 27 பறக்கும் படைகள், 27 தேர்தல் விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள், 9 வீடியோகிராபர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த சோதனையில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி பணமோ, நகையோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரி விளம்பரங்கள் மூலம் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வாகனங்கள் மூலம் பல வியாபாரிகள் எடுத்துச் சென்ற ரூ.6.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.