கடலூர் நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதால் கடந்த 2011ஆம் ஆண்டு கெடிலம் நதி கரையோரம் ஜவான் பவான் சாலையானது இரண்டரை கோடி மதிப்பீட்டில் போடப்பட்டது. ஆனால் இந்தச் சாலை தரமானதாக இல்லாததால் ஊழல் நடந்திருப்பதாக கூறி பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பின்னர், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைத்தனர். இதனைத் தொடர்ந்து தற்போதும் ஜவான் பவான் சாலை பள்ளமாகியுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தரவேண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பூங்காவை அங்கிருந்து அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன் வேடமிட்டும், கை கால்களில் முறிவு ஏற்பட்டதுபோல் கட்டு போட்டும் கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குரு ராமலிங்கம், சிவாஜி கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமார்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: விண்வெளி உடையணிந்து நூதனப் போராட்டம் - எதற்குத் தெரியுமா?