தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் தெற்குத் தெருவில் வசித்துவருபவர்கள் வில்ஜியூஸ் லோபா, லியோஜா தம்பதியினர். இவர்களது மகன் வில்பன் லோபா, கடந்தாண்டு நவம்பர் மாதம் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் மூலம் எம்.வி.ஹல்.விட்டா என்ற கப்பலில் எந்திரப் பொறியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தார்.
இவர், கடந்த ஜூலை 26ஆம் தேதி நைஜீரியா நாட்டுக் கப்பலில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்துவிட்டதாக மும்பையில் உள்ள அலுவலகம் மூலம் தந்தை வில்ஜியூஸ் லோபோவுக்கு தகவல்கள் வந்தன. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், புன்னைக்காயலில் உள்ள கப்பல் மாலுமிகள் சங்கத்தினர், மும்பையில் உள்ள அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத்தை தொடர்பு கொண்டு தனது மகனைத் தேடும் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தினார்.
மேலும், கனிமொழி எம்பி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார். இந்தச் சூழ்நிலையில், ஜூலை 28ஆம் தேதி காலை அதே பகுதியில் வில்பன் லோபோவின் உடல் கரை ஒதுங்கியது.
தற்போது, அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு இந்திய தூதரகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது, உடலை உடனடியாக மீட்டு சொந்த ஊர் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வில்பன் லோபாவின் உறவினர்கள் ஆட்சியரிடம் இன்று (ஆகஸ்ட் 12) மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் இறந்த இந்துவின் உடலை மீட்டுக் கொண்டு வந்த இஸ்லாமியர்கள்