கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக மருத்துவக் கல்லூரியை அரசு சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவந்து கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி திகழும் என அறிவித்தது.
இதனை தொடர்ந்து இங்கு கட்டணமும் அரசு கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் மேலும் தற்போது கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கும் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டாம் நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டாம் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை எனவே நீங்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
மேலும், நிலுவை தொகையும் செலுத்த வேண்டும், இல்லையென்றால் உங்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படும் எனவும் வாய்மொழியாக மிரட்டல் விடுவதாகவும், இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகின்றது எனவும் மாணவர்கள் கடந்த 9 நாள்களாக மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று (மார்ச் 7) ஒன்பதாம் நாளாக கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அமர்ந்துகொண்டு கட்டண குறைப்பை வலியுறுத்தியும் அரசு உத்தரவை அமல்படுத்த கோரியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் இன்று (மார்ச் 8) போராட்டத்தின்போது பல்கலைக்கழக பதிவாளர் துணைவேந்தரை சந்தித்து அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும் அதேபோல் கல்லூரியை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கல்விக் கட்டணத்தை எழுத்து மூலமாக எங்களுக்கு எழுதி கொடுங்கள் எனவும் கேட்க உள்ளதாக மாணவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை: சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு