சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைத் தங்கள் கல்லூரியில் வசூலிக்கக் கோரி வருகின்றனர்.
இதை வலியுறுத்தித் தொடர்ந்து 47 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதியை காலி செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அறிவித்தது.
ஆனால், விடுதியை காலி செய்ய மாட்டோம் என மாணவர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று(ஜன.24) அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர், சிதம்பரம் சட்டப்பேரவைத் உறுப்பினர் பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் உங்களைச் சந்திக்க வைப்பதாகக் கூறி போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும், தங்களுடைய கோரிக்கை நிறைவேறினால் மட்டுமேதான் போராட்டம் கைவிடப்படும் என்று உறுதியாக தெரிவித்தனர்.