கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கட்டணத்தை வசூலிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் 58 நாள்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதனை அடுத்து அரசு கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி செயல்படும் என்றும், அதேபோல இங்கு அரசு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.
மாணவர்களும் போராட்டம் வெற்றி அடைந்ததாகக் கலைந்துசென்றனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மீண்டும் பழைய கட்டணத்தைச் செலுத்த வலியுறுத்தி மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப். 26) மாணவர்கள் மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்கள்.
பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில், பதிவாளர் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு உயர்வான கட்டணம் வசூலிக்கக் கூடாது என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
ஆனால் நேற்று (பிப். 27) ஐந்து மாணவர்களுக்கு மீண்டும் பழைய கட்டணம்தான் செலுத்த வேண்டும் என்றும், எங்களுக்கு நிதிச்சுமை அதிகமாக உள்ளதால் மாணவர்கள் பழைய கட்டணத்தை கட்ட வேண்டும் எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மருத்துவ மாணவர்கள் நேற்று (பிப். 27) மீண்டும் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரி முதல்வர் அலுவலகம் எதிரே தங்களது செல்போனில் டார்ச் லைட் அடித்து அரசு கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ மாணவர்கள் கூறுகையில், “எங்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை வலியுறுத்திதான் நாங்கள் இவ்வளவு நாள்களும் போராட்டத்தை நடத்தினோம்.
ஆனால் அரசு உத்தரவில் கூறியிருப்பதை கல்லூரி நிர்வாகம் அமல்படுத்தாமல் பழைய கட்டணம் கட்ட வலியுறுத்திக் கூறுவது எந்தவிதத்தில் நியாயம். பிறகு, எதற்கு அரசு உத்தரவு என மாணவர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி கட்டணம் குறைக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என அறிவித்துள்ளனர்.