கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் தேவசகாயத்தை ஆதரித்து அக்கட்சியின் முதன்மைத் துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "தொலைக்காட்சியில் 'நீ திருடன் நான் திருடன்' என மாறி மாறி ஒருவரை ஒருவர் திட்டும் காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. நான் சினிமாவில் நடித்து சம்பாதித்து வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம். ஆனால் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்துள்ளேன்.
திமுக, அதிமுகவினர் மாறி மாறி மக்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே மாற்றத்திற்கு வாக்களியுங்கள். திராவிட கட்சியினர் சலவை இயந்திரம், கைப்பேசி, இரண்டு ஏக்கர் நிலம் உள்ளிட்டவை வழங்குகிறேன் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இலவசங்கள் வழங்குவதை விட்டுவிட்டு கரோனா நோய்த்தடுப்பதற்காக முகக்கவசத்தை வழங்கினால் நோய்ப் பரவாமல் தடுக்கலாம். காவலர்களுக்கு ஒரு கோடி வழங்கப்போவதாக திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் உதயநிதி காவல் உயர் அலுவலரை மிரட்டும் தொனியில் பேசுகிறார்.
திமுகவினரின் ரவுடிசம் ரத்தத்தில் ஊறியது, அதனை மாற்ற முடியாது. திமுகவினரின் செயலைத் தடுப்பதற்காக ஜெயலலிதா நில அபகரிப்புச் சட்டத்தை கொண்டுவந்தார்.
நமது வேட்பாளர் தேவசகாயம் போராடி நன்மையைப் பெற்றுத் தரக்கூடியவர். அவருக்கு நீங்கள் டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!