நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு, கடலூர் மக்களவைத் தொகுதிக்கு டி.ஆர்.வி.எஸ் ரமேஷ் வருகை தந்தார். அங்கு அவரை திமுக கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் சால்வை அணிவித்தும், மாலைகள் அணிவித்தும் வரவேற்றனர். இதனையடுத்து, திமுக தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் திமுகவின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள அண்ணா சிலைக்கும், தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.