கடலூர் சரவணபவ கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நியாய விலை கடை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இரண்டு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 55 ஆயிரம் பணியாளர்கள் ரேஷன் பொருள்களை வழங்கி வரும் நிலையில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட வேண்டும்.
ஊழியர்களின் பயணப்படி வழங்கிட வேண்டும், பெண் பணியாளர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற ஐந்தாம் தேதி கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுத்தனர்.