கடலூர்: கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த வீராரெட்டிகுப்பத்தில் அமலா சிறுவர், சிறுமியர் காப்பகம் மற்றும் பள்ளியை ஜேசுதாஸ் ராஜா (65) என்பவர் நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு காப்பகத்திலிருந்து, மூன்று பெண் குழந்தைகள் ஜேசுதாஸ் ராஜாவுக்குச் சொந்தமான பள்ளியில் சேர்ந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் காப்பகத்தில் இருந்த மூன்று சிறுமிகள் காணாமல் போனதாகக் கூறி, ஜேசுதாஸ் ராஜா ஆலடி காவல் நிலையத்தில், புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமிகளைத் தேடி வந்தனர்.
இறுதியாக காவல் துறையினர் சிறுமிகளை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தச் சிறுமிகள் ஜேசுதாஸ் ராஜா தங்களுக்குப் பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பதாகவும்; அதற்கு பயந்து அங்கிருந்து தப்பிச் சென்றாகவும் கூறினர்.
இதையடுத்து காவல் துறையினர் ஜேசுதாஸ் ராஜா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி தலைமையில், காவலர்கள் தீவிர விசாரணை செய்து, ஜேசுதாஸ் ராஜா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜேசுதாஸ் ராஜா பல ஆண்டுகளாக, காப்பக சிறுமிகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், காப்பகத்தில் உள்ள குழந்தைகளை, சிபிசிஐடி அமைப்பின் மூலம் விசாரித்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... மன அழுத்தத்தால் தந்தை தற்கொலை