கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு வசதி கேட்டு பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விண்ணபித்துள்ளனர். இதற்கான வங்கி கணக்குகள் உள்ளிட்ட சான்றிதழ்களை அந்தப் பகுதி அதிமுக கவுன்சிலர் தமிழ்செல்வனிடம் ஓராண்டுக்கு முன்னதாகவே கொடுத்துள்ளனர். இந்த நிலையில் வீடுகள் கட்ட பணம் எப்போது வரும் என்று கவுன்சிலரிடம் கேட்ட போது அவரும் அதற்கான பணம் வங்கி கணக்கில் சேர்ந்து விடும் என்று கூறி வந்துள்ளார்.
ஆனால் அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவர்களது சொந்த பணத்தில் வீடுகளை கட்டி முடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த பகுதியை சேர்ந்த குமார் மனைவி பூமாதேவி, தங்கராசு மனைவி லட்சுமி ஆகியோரது பெயருக்கு பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு கட்டியதற்கு திட்ட இயக்குநரிடமிருந்து வாழ்த்து கடிதம் வந்துள்ளது .இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டவில்லை; வங்கி கணக்கில் பணமும் வரவில்லை; ஆனால் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என வாழ்த்து கடிதம் மட்டும் வந்துள்ளது. அதனால் கட்டி கொடுத்த வீட்டை கண்டுபிடித்து கொடுங்கள் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர், கம்மியம்பேட்டை பகுதிக்கு சென்று புகார் கொடுத்தவர்களின் வீட்டை பார்வையிட்டு வீடியோ எடுத்தபோது, அந்த பகுதியில் 20 க்கும் மேற்பட்டோருக்கு இதே போல் கடிதம் வந்துள்ளது என தெரிவித்தனர். இதன் மூலம் இத்திட்டத்தில் மாவட்டம் முழுவதும் பல கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை நீக்கி ஏழைகள் முழுமையாக பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.