கடலூர்: புதுச்சேரி எல்லையில் தமிழக பகுதியான நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி மணிவண்ணன். இவருடைய மகள் மஞ்சள் நீராட்டு விழா நேற்று (ஜூலை 9) இரவு நல்லாத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கடலூர் திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் மற்றும் நிர்வாகிகளுடன் இரவு திருமண மண்டபத்திற்கு காரில் சென்றார்.
அவர் காரில் இருந்து இறங்கி மண்டபத்திற்குள் சென்று கொண்டிருக்கும்போதே மண்டபத்தில் நுழைவு வாயில் அருகே நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக மேசை அமைக்கப்பட்டு, அதில் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டு வந்தது. அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சாலையில் இருந்து, பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, தீ வைத்து நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் வீசினர்.
அந்தப் பாட்டில் பறந்து வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு, தரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்தச் சம்பவத்தால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அறிந்த எம்எல்ஏ ஐய்யப்பன் உடனடியாக வெளியே வந்து நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: ‘அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம்’ : ஆளுநரை எதிர்த்து மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம்!
அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ ஐய்யப்பனை உடனடியாக அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியில் அனுப்பி வைத்தனர். இச்சம்வம் குறித்து உடனடியாக கடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் உடன் பெட்ரோல் கலந்து வீசி இருப்பது தெரியவந்தது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுகான காரணம் என்ன? பெட்ரோல் குண்டு வீசியது யார்? எம்எல்ஏ-வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து இரண்டு பேரிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்றது தமிழகம் - புதுச்சேரி எல்லைப் பகுதி என்பதால் புதுவை மாநிலத்திலும் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக, எம்எல்ஏ கலந்து கொண்ட விழாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘வணிகத்தால் செழித்த ராமநாதபுரம்’ - தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு பேச்சு..