சிதம்பரம்: சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.இத்திருக்கோயில் ஐந்து பஞ்சபூத தளங்களில் ஒன்றானதும்,இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும்.மிகவும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழாவை ஒட்டி,கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோவில் பொது தீட்சிதர்கள் பதாகை வைத்தனர்.
இந்த அறிவிப்புக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில்,இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த பலகையை அகற்றச் சென்றனர்.அவர்களை முற்றுகையிட்டு தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்த நிலையில் (27.06.2023) அன்று போலீசார் முன்னிலையில் கனகசபை திறக்கப்பட்டு,அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்னை எழுந்தது.
கனகசபையில் பக்தர்கள் ஏற கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டதால்,கனகசபையில் அனைத்து பக்தர்களும் ஏற உரிமை உண்டு என்பதை உறுதி செய்யும் வகையில் 2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.இந்த அரசாணையை தீட்சிதர்கள் தற்போது மீறியதால் அறநிலையத்துறை தலையிட நேரிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக,தற்போதைய சூழலில் கோயிலை மீண்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார்,இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. சென்னையில் நேற்று (28.06.2023) செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'தெய்வம் எப்படி பக்தர்களுக்கு தீங்கு விளைவிக்காதோ அது போன்று,தீட்சிதர்களும் தீங்கு விளைவிக்கக் கூடாது.ஆனால் எவையெல்லாம் சட்ட விரோதமோ,அதையெல்லாம் ஒரு சில தீட்சிதர்கள் கையில் எடுத்து செய்கின்றனர்.ஏற்கெனவே நகை சரிபார்ப்பு பணிக்கு சென்ற அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்தனர்.
பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றத்தை நாடப்போவதாக அர்ச்சகர்கள் கூறியுள்ளனர்.அதனைத்தான் நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.மேலும்,'சிதம்பரம் கோயிலைப் பொறுத்தவரை பக்தர்களின் நலனுக்கான நடவடிக்கைகளிலிருந்து எந்த நாளும் பின்வாங்கப்போவதில்லை'எனவும், பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
மேலும்,தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,கோயிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணை,உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும் கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால்,அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:"கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்!