கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த சடையன், எடையூறை சேர்ந்த ரெங்கநாதன், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ரவி, நெய்வேலியைச் சேர்ந்த கொளஞ்சி, வேப்பூர் சார்ந்த ஆசைத்தம்பி, ஆகியோர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ’விருதாச்சலம் பெரியார் நகரைச் சேர்ந்த ராமலிங்கம், மகேஸ்வரி, பாலு ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி எங்கள் ஆறு பேரிடம் இருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றினார்கள்.
மேலும், எங்களைப்போல் 20க்கும் மேற்பட்டோரிடம், இப்படிப் பணம் வாங்கி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 10ஆம் தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தோம். அதன்பேரில் கடந்த 18ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. விசாரணையில் மகேஸ்வரி, அவர்களின் நிறுவனத்தை முறையான பதிவு செய்யாமல், சுற்றுலா நுழைவுச்சான்று (டூரிஸ்ட் விசா) மூலம் எங்கள் ஆறு பேரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் குற்றவாளிகளான அம்மூவர் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புகார் கொடுத்த எங்களிடம் மட்டுமே தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசாரணை அலுவலர்கள் கையெழுத்துப் போட்டு விட்டு, வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர்.
ஆகையால் குற்றவாளிகளான மூவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் எதிலும் கையெழுத்துப் போட மாட்டோம் எனத் திட்டவட்டமாகக் கூறி வந்துள்ளோம். எங்களின் பணத்தைப் பெற்றுத் தராவிட்டாலும், அம்மூவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.