கடலூர் மாவட்டம் பண்ருட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலாப்பழம். இங்கு விளையும் பலாப்பழம் உலக அளவில் புகழ் பெற்றவை. இந்த செம்மண் பகுதியில் விளையும் பலாப்பழத்திற்கு தனிச்சுவை உண்டு. பண்ருட்டி, அதனைச் சுற்றியுள்ள காடாம்புலியூர் மூலக் குப்பம், பெத்தாங்குப்பம், நெல்லிக்குப்பம், காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, நரியங்குப்பம், விலங்கள்பட்டு, குளமங்கலம், பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, வாண்டராசன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா பயிரிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே வரை பலாப்பழ சீசன் இருக்கும். இந்த சீசன் காலத்தில் பண்ருட்டி, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலாப்பழம் விற்பனை களைகட்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான பலாப் பழம் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
ஒரு பலாப்பழம் 100 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், விவசாயிகள் மரத்திலுள்ள பழங்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்துவருகின்றனர்.
இதனால், பழங்கள் மரத்திலேயே அழுகி வீணாகின்றன. ஏற்கனவே அறுவடை செய்துவைத்த பழங்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய வாகனங்கள் கிடைக்காமல் பழங்கள் அழுகிய நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து பலாப்பழ விவசாயி கூறுகையில், "ஊரடங்கால் பலாப்பழங்களை அறுவடை செய்ய தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. இதனால் பழங்கள் மரத்திலேயே வெடித்து அழகி விடுகின்றன சாலையோரம் வைத்து கடைகளில் விற்பனை செய்தால் அதனை வாங்க மக்கள் வெளியே வருவதில்லை.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆள்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடைசெய்தோம். அந்தப் பழங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல முடியாமல் தவித்துவருகிறோம்.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பலாப்பழங்களை அறுவடை செய்யவும், இங்கிருந்து தடையின்றி வெளிமாநிலங்களுக்கு வாகனங்களில் ஏற்றிச்செல்லவும், பதப்படுத்தி வைக்கவும், இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: வாழ்வாதாரம் இழந்து நிற்கும் முந்திரி விவசாயிகள் - கைக்கொடுக்குமா தமிழ்நாடு அரசு?