கடலூர்: கடலூர் மாவட்டம் துவங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று (செப்.29) கடலூர் வெள்ளி கடற்கரையில் மிகப்பெரிய அளவிலான புத்தகக் கண்காட்சி துவங்கப்பட்டது. மேலும், இதன் அருகிலேயே அரசின் பல்துறை விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்காக, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு இந்த பகுதியில் பந்தல் அமைப்பாளர்கள் கொண்டு வந்த நாற்காலிகள் மற்றும் கார்பெட், கார் ஜாக்கி, டேபிள் உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த பொருட்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரோதான் எடுத்திருக்க வேண்டும் என பொருள் உரிமையாளர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினர் தேவனாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பொருட்களை எடுத்திருக்கலாம் என எண்ணி, அந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவ பஞ்சாயத்தில் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
மீனவ பஞ்சாயத்தார், இது குறித்து ஆட்டோ ஒன்றில் ஒலிபெருக்கி கட்டி தெரு தெருவாக அந்த பொருட்களை யாராவது எடுத்து இருந்தால், அதே இடத்தில் வைக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறதாக அறிவித்தனர். மேலும், "நமது ஊர் கடற்கரையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற இடத்தில் இருந்து காணாமல் போன பொருட்களை எடுத்தவர்கள், மீண்டும் அதே இடத்தில் சென்று எடுத்தப் பொருளை வைத்து விடுங்கள்.
இல்லையேல், காவல்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டால், ஊர் நிர்வாகம் அதற்கு பொறுப்பெடுக்காது" என்ற வகையில் அந்த அறிவிப்பை ஊரிலுள்ள அனைத்து தெருக்களிலும் ஒலிபரப்பினர். இப்படியான செயல்களைப் பார்பதற்கு சிரிப்பாக இருந்தாலும், இதனை அதிகாரிகள் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: புனித காசி யாத்திரை; பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு!