கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மே மாதம் 20ஆம் தேதி இவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், மருத்துவர் ஒருவர் தனது கணவருக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் தான் தன் கணவர் இறந்து விட்டதாகக் கூறி, ராஜாவின் மனைவி கயல்விழி கதறி அழுதபடி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதுசம்பந்தமாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.