கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மாளிகை கோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு வயதில் இரணியன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
நேற்று மதியம் வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், பெண்ணாடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிசிடிவி கேமரா மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நேற்று முழுவதும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் விழுந்திருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு துறை உதவியுடன் இன்று வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வயது குழந்தை இரணியன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்து செல்லப்பட்டது. குழந்தை தவறுதலாக விழுந்ததா? வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் பெண்ணாடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.