கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 27 பேர் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் முழுமையாகச் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 7 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கடந்த 10 நாள்களாகக் கடலூர் நகரத்தில் இதுவரை ஒருவருக்குக்கூட கரோனா தீநுண்மி தொற்று இல்லாமல் இருந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் ஆந்திர மாநிலத்திலுள்ள புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வீடு திரும்பியுள்ளனர்.
இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என சுகாதாரத் துறையினர் பரிசோதனைக்குள்படுத்தினர். அப்போது ஐந்து பேருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
ஆனால் கடலூர் வண்ணாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 69 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவரை சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வண்ணாரபாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டி பூட்டுப்போட்டனர். மேலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து, வெளியாள்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு சீல்வைத்து தடுப்புகளை அமைத்தனர். இதனால் தற்போது கடலூர் நகரில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.