நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடிகர் விஜய்யைக் காண்பதற்காக தினந்தோறும் அப்பகுதியில் விஜய் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே கடந்த வாரம் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து, நெய்வேலியில் நடைபெறும் ஷுட்டிங்கில் விஜய் மீண்டும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாலையில் ஷுட்டிங் முடித்துக்கொண்டு கிளம்பிய விஜய், சுரங்கம் முன்பாக குவிந்த தனது ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறிய விஜய், ரசிகர்கள் முன்பாக கையசைத்து செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகின.
இதனிடையே இன்றும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டார். இன்றுடன் விஜய் தொடர்பான காட்சிகள் நிறைவுபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஷுட்டிங் முடித்துக்கொண்டு கிளம்பிய விஜய், இன்றும் தனது ரசிகர்களைக் காண்பதற்காக, அங்கிருந்த பேருந்தின் மீது ஏறினார். அங்கு திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்த விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். விஜய்யைப் பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.
இரண்டு தினங்களுக்கு முன் விஜய் தனது செல்போனில் எடுத்த புகைப்படம் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் முறையாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்ற ரெனீ ஜெல்வெகர்