கடலூர் நெய்வேலி என்.எல்.சி. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (47). மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை (53) ஆகிய இருவரும் பணியாற்றி வந்துள்ளனர். நேற்று காலை இரண்டாம் அனல் மின் நிலைய கொதிகலன் பிரிவில் இவர்கள் பணிபுரிந்துவந்தனர்.
அப்போது கொதிகலனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அருகிலிருந்த நிலக்கரி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் பயந்தபோன வேல்முருகன், பாவாடை இருவரும் அருகில் இருந்த மின்தூக்கியில் ஓடி ஒளிந்துள்ளனர்.
தீ விபத்தால் மின்தூக்கி கட்டுப்பாட்டை இழந்து தானாக மேலே சென்று அனல் மின் நிலைய ஒன்பதாவது மாடிக்கு சென்று நின்றுவிட்டது, இதனால் அங்கு இருவரும் சிக்கிக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் தீ விபத்து குறித்து அறிந்த என்.எல்.சி. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முழுமையாக அணைத்துள்ளனர்.
அப்போது அருகில் இருந்த மின்தூக்கி காணாததால், சில ஊழியர்கள் ஒன்பதாவது மாடி சென்று பார்த்தபோது, மின்தூக்கியில் இருவரும் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின்பு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் மீட்கும்போது வேல்முருகன் உயிரிழந்த நிலையிலும், பாவாடை படுகாயங்களுடன் ஆபத்தான நிலையிலும் இருந்தனர்.
உயிருக்குப் போராடிய பாவாடை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பின் வேல்முருகன் உடல் உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து நெய்வேலி தெர்மல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.