கடலூர்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை தீட்சிதர்கள் நிர்வகித்து, பூஜை செய்து வருகின்றனர். தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் எனப்படும் குழந்தைகள் திருமணம் நடப்பதாக தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்தது. இதுதொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உரிய விசாரணை நடத்தி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தீட்சிதர்கள் சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
இதில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும். அவ்வாறு செய்தது தவறு எனவும், சமீபத்தில் தமிழக ஆளுநர் கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மருத்துவ குழுவினர் ஏற்கெனவே விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேற்று சிதம்பரத்தில் விசாரணை நடத்தியது. இந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் நேற்று மாலை சிதம்பரம் வந்தார். சிதம்பரம் பொதுப்பணித்துறை மாளிகையில் தங்கிய அவர், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கோயில் தீட்சிதர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் மருத்துவரிடமும் விசாரணை மேற்கொண்டார். பின்னர் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார்.
காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் முன்னிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல், நடந்த சம்பவங்கள் வரை விசாரித்து கேட்டறிந்தார். பின்னர் மீண்டும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற அவர் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தீட்சிதர்களிடமும் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து நடராஜர் கோயில் வாயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆனந்த், “சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குடும்பத்தில் நடந்ததாக கூறப்படும் குழந்தைகள் திருமணம் விவகாரத்தில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஒரு பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்று, தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்த வழக்கு சம்பந்தமான முழு அறிக்கையும் சமர்பிக்க அவகாசம் கொடுத்திருந்தார்கள். அந்த அறிக்கை வந்திருக்கிறது.
அதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் உண்மையா என்பதை விசாரித்துதான் தெரிந்து கொள்ள முடியும். மூன்று கட்டமாக விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட தீட்சிதர்களுடன் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. அடுத்தபடியாக காவல்துறை அதிகாரிகளிடம் சில விளக்கங்களை கேட்டோம். அதற்குப் பிறகு பாதிக்கப்பட்ட குழந்தையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இது அனைத்தையும் முழுமையாக பதிவு செய்து வைத்திருக்கிறோம்.
இந்த விசாரணை அறிக்கையை ஆணையத்தின் தலைவருக்கு அளிப்பேன். இரண்டு மூன்று தினங்களுக்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும். குழந்தை திருமணம் நடைபெறவில்லை. எங்களை கட்டாயப்படுத்தி நடந்ததாக சொல்ல வைத்தார்கள் என்பது குழந்தைகளின் கருத்தாக இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த குழந்தைகள் திருமணங்கள் குறித்தும் ஆணையம் விசாரித்து இருக்கிறது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆணையம் தீவிரமாக இருக்கிறது. இந்த அறிக்கையை சமர்ப்பித்து விட்டு இதற்குண்டான நடவடிக்கை எடுப்போம். இது குழந்தை சம்பந்தப்பட்டது என்பதால் ரகசிய விசாரணை நடந்தது. இந்த சம்பவத்தில் இரு விரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் ஆனால் குழந்தைகளின் பிறப்புறுப்புகளை தொட்டு விசாரணை நடத்தியது உண்மை. மூன்று கட்ட விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் விசாரணை கொஞ்சம் பாக்கி இருக்கிறது. அது முடிந்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு முழு விவரங்கள் வெளியிடப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தியேட்டரில் காலாவதியான உணவுகள் விற்பனை; அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன்!