கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர், உள்ளிட்ட சிலர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து மாவட்டத்தில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் இரண்டாம் தொகுப்பினை அளித்தனர்.
இந்த கோரிக்கை மனுக்கள் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவருகிறார். திமுக தலைவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஆனால் அமைச்சர்கள், தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியில் வராமல் அறிக்கை மட்டுமே வழங்கி வருகின்றனர். அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் குறித்து குறைகூறி வருகிறார்கள்.
மு.க.ஸ்டாலின் வாத்தியார் போல் இருந்து கொண்டு மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் எனக் கூறி வருகிறார். இதனை மாணவன் போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்திவருகிறார்.
தூற்றுபவர்கள் தூற்றிக் கொண்டே இருப்பார்கள். 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின்கீழ் மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டே செல்வோம். அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை, ரேஷன் கடை மூலம் இலவசப் பொருள்கள் போன்றவற்றை வழங்கிவிட்டு, பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என கூறி வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் ரூபாய் மூலம் அவரது குடும்பத்தை நடத்துகிறாரா ? என்பது தெரியவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து, வழங்கிய ஆயிரம் ரூபாய் பணத்தை மீண்டும் அரசு வாங்கிக் கொண்டது. இதன் மூலம் பொதுமக்கள், ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்'' என்றார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் அரசியல் நாடகம் ஆடுகிறார்- அமைச்சர் காமராஜ்