கடலூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி உபரி நீர் இரண்டு லட்சம் கனஅடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் வருகிறது. இதனால் நீர் வரத்து அதிகரித்துக்காணப்படுகிறது. இதனால் சிதம்பரம் அருகேவுள்ள பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் புதிய கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே உள்ள திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய மூன்று கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டப் பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டிருந்தார்.
அவருடன் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியன், புவனகிரி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அருண்மொழித்தேவன் இருந்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகளையும், மதிய உணவினையும் சி.வி. சண்முகம் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச்சந்தித்துப்பேசினார். அப்போது, “கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையால் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இரண்டு லட்சம் கன அடி நீர் திறந்து விடும் அளவிற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மழை இல்லை. ஆனால், மழை இல்லாமலேயே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். ஒரு லட்சம் கன அடி நீரைத்திறந்து விட்டாலே தாங்க முடியாத கிராம மக்கள், இரண்டே கால் லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 20 நாள்களாக கர்நாடக மாநிலத்தில், காவிரி படுகையிலே கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையின் காரணமாக தமிழ்நாட்டிற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நீர்வரத்து கடுமையாக உயர்ந்திருக்கிறது. மேட்டூர் பகுதியில் இன்றைக்கு வரும் இரண்டேகால் லட்சம் கன அடி நீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொள்ளிடக்கரையோரத்தில் பல கிராமங்கள், வீடுகளில் நீரில் சூழ்ந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் காவிரி கொள்ளிடக்கரையோரத்திலுள்ள கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயல்படாத அரசு நாங்கள் பலமுறை சொல்லி இருக்கிறோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற ஆட்சி செயல்படவில்லை. ஆட்சி நிர்வாகம் செயல்படவில்லை. இன்றைக்கு போட்டோ ஷூட் மட்டும் நடத்திக்கொண்டிருக்கிற ஒரு ஆட்சி. படம் எடுப்பது, படத்தைப் பார்ப்பது, சில படத்தை வெளியிடுவது, இதைத்தவிர இந்த ஆட்சியாளருக்கு வேற எதுவும் தெரியாது.
தினந்தோறும் ஒரு சினிமாவை பார்த்துக்கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர். கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம், இதுபோன்று சம்பவங்களைப் பற்றி கவலைப்படாத முதலமைச்சர் சினிமாவைப் பார்ப்பதும் அதை விநியோகிப்பதையும் விட்டுவிட்டு மக்களுக்கு உரிய சேவைகளை செய்ய வேண்டும்” என ஆவேசமாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் உரிய வசதிகள் செய்துதரவில்லை. தற்காலிகமாக தங்க வைக்கப்பட்ட இடங்களில் உரிய மின் வசதி செய்து தரப்படவில்லை. உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வழக்கம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்கள் இங்குள்ள பாலத்தின் மீது வந்து செல்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிதம்பரம் அருகே உள்ள ஆதனூர் குமாரமங்கலம் இடையே 500 கோடி ரூபாய் அளவில் தடுப்பணை கட்டி நடவடிக்கை எடுத்தது.
அந்தப்பணிகள் தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது ஓராண்டு கால ஆட்சியில் உள்ள திமுக, அதை செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும், பணிகளையும் செய்து முடித்ததே இல்லை.
மழை வெள்ள காலத்துக்கு முன்பே இந்த கொள்ளிடத்தில் இரு கரைகளையும் பலப்படுத்தி இருக்க வேண்டும். சினிமா பார்ப்பதையும் சினிமா வாங்குவதையும் தவிர்த்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பேனா சிலை வைத்த நேரு ஆதரவாளர்கள்