கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் ஆபத்தானது. இதனால் வடமாநிலங்கள் பற்றி எரிகின்றன.
வரலாறு காணாத அளவுக்கு கலவரம் நடந்து வருகிறது. இவைகளை பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் மோடி கங்கையை தூய்மைப்படுத்துகிறேன் என்று கூறிவிட்டு அங்கேயே அமர்ந்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் என்ன? மக்களின் மனதில் என்ன இருக்கிறது, என்று மோடி புரிந்துகொள்ள வேண்டும்.
மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதுதான் வழக்கம். அமெரிக்காவில் அமெரிக்கர் என்று யாரும் கிடையாது. இங்கிலாந்து, ஆசியா, ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்தான் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்களால் அந்த நாடு தலைசிறந்த நாடாக மாறியுள்ளது.
எனவே உலகம் எந்த திசையில் செல்கிறதோ, அந்த திசையில் மோடி செல்ல வேண்டுமே தவிர 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை அடைவேன் என்று சொன்னால் அது காட்டுமிராண்டி நிலை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்தில் காட்டுமிராண்டிதனம்தான் இருந்துள்ளது.
ஒரு செம்மையான சமூகம் வேண்டுமா காட்டுமிராண்டித்தனமான சமூகம் வேண்டுமா என்பதை மோடி முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது.
ஆளுங்கட்சி அதிகாரம், பண பலம், ஆள் பலத்தை வைத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு துணையாக செல்கிறது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையே ஒரே நாளில் நடத்தி வருகிறோம். ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துகிறார்கள்.
ஏனென்றால் பொய் வாக்கு போடுவதற்கும், கலவரம் செய்வதற்கும், வேட்பாளர்களை தூக்குவதற்கும் இந்த தேர்தலை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சேவை செய்கிற ஒரு அமைப்பாக இருக்கிறது. அந்த அமைப்பை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: #DMKagainstCAA: கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்