கடலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைப்பெற்றது. தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு அடுத்தக் கட்டமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ''தமிழ்நாடு முதலமைச்சர் கரோனாவைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொற்று குறைந்து வருகிறது.
இன்னும் சில நாள்களில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கரோனாவை ஒழித்திட முடியும். முதற்கட்டமாக, ஜுரம் என்று வந்தால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதித்துக் கொள்ள வேண்டும்.
மருந்தகங்களில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மருந்தகங்களில் உடல்நிலை சரியில்லை என்று வருபவர்கள் தவறான மருந்துகளை வழங்கல், சிகிச்சையை செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் தண்ணீர் திறக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்கப்படுவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள் ரூ.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து காவேரி டெல்டா பகுதிகளில் தண்ணீர் வருவதற்காக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால், தண்ணீர் திறக்கப்பட்ட ஒரு சில நாள்களில் கடைமடை பகுதியை வந்தடையும். வேளாண் துறை மூலமாக டெல்டா பகுதி மக்களுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் அதுபோன்று நெல் விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தேவைக்கேற்ப விதைநெல் உரங்கள் கிடைத்திட போதிய இருப்பு வைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திடீர் மூச்சுத் திணறல்- ஐசியூவில் மில்கா சிங்!