தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்ட தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் 1,242 பயனாளிகளுக்கு கடன் வழங்கி இந்த திட்டத்தை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடக்கி வைத்தார். கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிடவும் மற்றவர்களைச் சார்ந்து இல்லாமல் இருக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் வழங்கப்பட்டுவருகிறது.
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 31 கிளை வங்கிகள், 159 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 8 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் 10 ஆயிரத்து 753, ஆண்கள் சுய உதவிக் குழுக்கள் 137 என மொத்தம் 10 ஆயிரத்து 390 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் மொத்தம் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 125 உறுப்பினர்கள் உள்ளனர்.
மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 2019-2020ஆம் ஆண்டிற்கு 804 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 26. 97 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட் 19 சிறப்பு கடன் உதவி திட்டத்தின் மூலம் 85 குழுக்களுக்கு ரூ. 72 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தார்.
இதையும் படிங்க... 57 குடும்பங்களுக்கு உதவிய 9 வயது சிறுமி: தன் இருக்கையில் அமரவைத்து கௌரவித்த ஆட்சியர்!