நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இதில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா அனுப்பி ஒரு மாதங்கள் கடந்தும் இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்கக் கோரி, முதலமைச்சர், அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எனப் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று சந்தித்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
மருத்துவக் கல்லூரியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் துணை வேந்தர் சூரப்பா தன்னிச்சையாகச் செயல்பட்டதால், அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம்!