கடலூர்: வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(டிச.10) அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது சுமார் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடலூரில் பல்வேறு மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்து பாதிப்பினை ஏற்படுத்தியது.
தாழங்குடா,சோனங்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டது. மேலும் சோனங்குப்பம் பகுதியில் கடல் நீர் 100 மீட்டர் அளவிற்கு உள்புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிப்பு அடைந்தனர். மேலும் கடலூர் பகுதியில் புயல் காரணமாக குண்டு உப்பலவாடி, பாரதி சாலை உள்ளிட்டப் பகுதிகளில் காற்றின் வேகத்தால் முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்றி பாதிப்பை சீர் செய்தது.
மேலும் கடலூர் வெள்ளி கடற்கரையில் உள்ள சிறுவர் பூங்கா நீரில் மூழ்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பேரிகார்டுகள் சாலைகளில் சாய்ந்துள்ளன. மேலும் துறைமுகம் உள்ளிட்டப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் பாதுகாப்பாக உள்ளன.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக ஏற்றப்பட்ட எச்சரிக்கை கொடி எண் 5 தற்போது புயல் கரையைக் கடந்ததால் அதிகாலை இறக்கப்பட்டது. புயல்,சுனாமி உள்ளிட்டப் பல்வேறு பேரிடர்களில் கடலூர் மாவட்டம் சிக்கிய நிலையில் மாண்டஸ் புயலும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கடலூர் மாவட்டம் இந்தப் புயலில் இருந்து தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நிரம்பி மறுகால் போன போளிவாக்கம் ஏரி; திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் இடையே போக்குவரத்து பாதிப்பு