நாடு முழுவதும் வெங்காயத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தைத் தொட்டது. இதனால், மக்கள் வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
தற்போது வெங்காயத்தை இரண்டு டன்னுக்கும் மேல் பதுக்கி வைத்திருந்தால், அரசு ஏழு ஆண்டுகள் சிறை என அறிவித்திருந்த நிலையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காயம் முழுவதும் வெளியில் சந்தைக்கு வந்துள்ளன.
நேற்றைய தினம் பெங்களூரு சந்தைக்கு வரத்து வெங்காயம் வந்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் வியாபாரிகள் பெங்களூரிலிருந்து குறைவான விலைக்கு பல டன் வெங்காயத்தை கொள்முதல் செய்தனர். நேற்று(டிசம்பர் 10) கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம், இன்று காலை கடலூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கும், 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு கிலோ வெங்காயம் பத்து ரூபாய்க்கு என கடலூர் துறைமுகத்தில் உள்ள பக்தவச்சலம் மார்கெட்டில் திடீரென விற்கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் வெங்காயம் வாங்க கூட்டம், கூட்டமாய் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் முதுநகர் காவல்துறையினர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் கடலூரில் வெங்காயத்தை நான்கு வகையாகப் பிரித்து, மூன்று வகை வெங்காயத்தை கிலோ 20 ரூபாய்க்கும், பல்லாரி வெங்காயத்தை கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
200 ரூபாய்க்கு வெங்காயம் வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில் சிக்கித் தவித்த சாமானிய மக்கள், தற்போது கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் வரப்பிரசாதமாக உள்ளது என இல்லத்தரசிகள் தெரிவித்தனர். வெங்காயம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் கடலூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெங்காயம் வாங்க முந்திக்கொள்ளும் மக்களின் கூட்ட நெரிசல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : விபத்தில் காயமடைந்த முதியவருக்கு முதலுதவி செய்த காவலர் - காணொலி வைரல்!