கடலூர் மாவட்டம் குறவன் மேடு பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரின் மகன் சபரிநாதன் கடந்த 11ஆம்தேதி மாலை என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகன்கள் நிரபு, தீரன் மற்றும் சந்திரகாசு என்பவரின் மகன் கோபி (26) ஆகியோர் சபரிநாதனை வழிமறித்து திருமண விருந்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை என தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக சபரிநாதன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் அமுதா விசாரணை மேற்கொண்டார்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான கோபி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் அவர் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.