கடலூர்: சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சத்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிகபெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை மோடி அரசு மூடி மறைக்கிறது. பொதுமக்கள் இதனைக் கண்டு கிளர்ந்து எழ வேண்டும். இஸ்ரேல் செயலி மூலமாக நமது நாட்டின் எதிர்கட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், 17 ஊடகங்கவியலாளர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளனர்.
எங்கள் தலைவர் ராகுல்காந்தியின் செல்போன் பேச்சும் உளவு பார்க்பட்டுள்ளது. நமது இராணுவ ரகசியங்கள் கூட கண்காணிக்பட்டுள்ளது. இந்த சதி திட்டத்திற்கு மோடி அரசாங்கம் துணை போயுள்ளது. இந்தியாவில் ரா, சிபிஐ, ஐ.பி, என மூன்று உளவு நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு கூட இந்த விவகாரம் தெரியவில்லை. நமது நாட்டின் உளவு அமைப்பு, எதிர்கட்சிகள், நீதிபதிகள், ஊடகங்கள், இராணுவ அலுவலர்கள் என அனைவரும் ஏமாற்றபட்டுள்ளனர்.
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறது.
இந்தியவின் சுகாதாரத் துறை அமைச்சர் நேற்று, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் யாரும் இறக்கவில்லை என்று ஒரு தவறான தகவலை ஊடகத்திடம் தெரிவித்து உள்ளார். கரோனா தொற்று ஏற்பட்ட முதாலம் ஆண்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் எதுவும் செய்யதிருக்க முடியாது. இப்போது நிலைமை அப்படி இல்லை. அரசு நினைத்திருந்தால், இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி தயாரித்து செலுத்தி இருக்கலாம். ஏனென்றால், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடுப்பூசிகளின் தாயகமாக இந்தியா தான் இருந்துள்ளது. பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை தயார் செய்யாமல், அவரது இரண்டு நண்பர்களுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியை கொடுத்தார். அவர்களால் இப்போது உற்பத்தி செய்ய முடியவில்லை. அந்த விசயத்தில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்
தன்னிறைவு அடைந்த தமிழ்நாடு
அதேபோல ஆக்சிஜன் தயாரிப்பும். தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் பெரிய முயற்சி எடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியில் 90 நாள்களில் தன்னிறைவு அடைந்து சாதனை படைத்திருக்கிறார். அதற்காக முதலமைச்சர் பெரிய முயற்சியை எடுத்துக் கொண்டார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் 12 பேரும், குஜராத்தில் 83 பேரும், கர்நாடாகாவில் 36 பேரும், ஆந்திராவில் 40 பேரும், ஹரியானாவில் 15 பேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இவை ஊடகங்களில் வந்த செய்திகள். இது தெரியாமல், நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தவறான தகவலை சொல்வது விதிமுறைகளுக்கு எதிரானது.
காங்கிரஸ் கண்டன பேரணி
செங்கல்பட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனத்தில், தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதி அளித்திருந்தால் தமிழ்நாசு அரசு தன் சொந்த செலவில் தடுப்பூசி தயாரிக்க தயாரிக்க தயாராக இருப்பதாக கூறியும் அனுமதி வழங்கப்பட வில்லை. ஒரு தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசை நம்பவில்லை. இதில் கூட்டாட்சி தத்துவம் எங்கே இருக்கிறது.
ஒன்றிய அரசு அனைத்து விசயங்களிலும் தோல்வியடைந்து விட்டது. இதனை ஊடகங்கள் பேச மறுக்கின்றன. இதனை கண்டித்து நாளை ஆளுநர் மாளிகையை நோக்கி, காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொங்கு மண்டலம் வாங்க சின்னம்மா!