விருத்தாசலம் அருகிலுள்ள கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவி திலகவதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரை ஒரு தலையாக காதலித்த அவருடன் பள்ளியில் படித்த ஆகாஸ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், திலகவதி கொலையை கண்டித்து பாமக சார்பில் இன்று கருவேப்பிலங்குறிச்சியில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே.மணி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் உள்ள திலகவதி உடலை பார்வையிட்டு கருவேப்பிலங்குறிச்சிக்கு சென்று திலகவதியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சாலையில் பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் பாமக மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் டாக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே மணி பேட்டி, "கலப்புத் திருமணம், காதல் திருமணம் ஆகியவை தமிழ்நாடு முழுக்க நடைபெறும் பிரச்னை. இந்த பிரச்னைகளுக்கு தலைமையிடமாக இருப்பது கடலூர் மாவட்டம்தான்.
எந்த மாவட்டத்தில் காதல் திருமணம் என்றாலும் அவர்கள் கடலூர் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்து இங்கு திருமணம் செய்து கொள்கின்றனர். ஆகவே, மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.