கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொங்கணம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 270 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி கடைசி நாளான இன்று மாணவர்கள் வருகை தந்திருந்தனர். சுமார் 200 மாணவர்களுக்கு புளியோதரை வழங்கப்பட்டது, உணவு பற்றாகுறையால் எஞ்சிய 25 மாணவர்களுக்கு மதிய உணவு கிடைக்கவில்லை. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த 25 மாணவர்களுக்கான உணவினை அவசர அவசரமாக தயாரித்து வழங்கி உள்ளனர்.
இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு மருத்துவர்கள் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மதிய உணவு சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.