கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர், சாத்தநத்தம் கிராமங்களுக்கு இடையே ஓடை உள்ளது. இந்த ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அருகிலுள்ள விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்து விளைநிலங்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்துவருகிறது.
இதனைத் தடுப்பதற்கு நாவலூர் ஓடையில் தடுப்பணை கட்ட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது திட்டமிட்டுள்ள இடத்தில் தடுப்பணை கட்டினால் விவசாய நிலங்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் மாற்று இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.
இந்நிலையில் ஊராட்சி உதவி இயக்குநர் பிரபாகரன், ஒன்றிய பி.டி.ஓ. சங்கர் ஆகியோர் தடுப்பணை அமைய உள்ள இடத்தை ஆய்வுசெய்ய வந்தனர். அப்போது சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஊராட்சி உதவி இயக்குநர் பிரபாகரன், செயற்பொறியாளரின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வு காணப்படும் என உறுதிஅளித்தார்.
அப்போது நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தரைப்பாலம் நீரில் மூழ்கி தங்கள் கிராம மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, தடுப்பணை அமையாவிட்டால், மேம்பாலம் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே அலுவலர்கள் முன்னிலையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க...'தூங்கி எழுந்ததும் கரோனாவால இன்னொரு சாவு விழுந்துடக் கூடாதுனு மனசு தவிக்குது' - மயான ஊழியர் உருக்கம்