கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த லக்கூர் பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. கோடைக் காலம் என்பதால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மான்கள் குடிநீர் தேடி கிராம பகுதிக்கு வருகின்றன.
இந்நிலையில் குடிநீர் தேடி லக்கூர் கிராம பகுதிக்கு மூன்று வயது மதிக்கதக்க புள்ளிமான் ஒன்று வந்தது. அதனை கண்ட தெரு நாய்கள் விரட்டியதால் தப்பிக்க ஓடும்போது, அங்கிருந்த ஐம்பது அடி ஆழ கிணற்றில் மான் தவறி விழுந்து உயிரிழந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் ராமநத்தம் காவல்துறையினர் மானின் உடலை மீட்டனர். அங்கு விரைந்த கால்நடை மருத்துவர், மானினை உடற்கூறாய்வு செய்தார். அதன் பின் நாங்கூர் காப்பு காட்டில் மானின் உடல் புதைக்கப்பட்டது.