கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வையங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் அசோக்குமார் (35) இவருக்கும் சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கிளி என்பவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆண் வாரிசு இல்லாததால் அசோக்குமார், தன் வீட்டுப் பக்கத்தில் உள்ள 16 வயது சிறுமியை காதலிக்கிறேன் என்று கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிறுமியிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தச் சிறுமி மறுத்துள்ளார். ஆனால் இந்தத் திருமணத்திற்கு தனது மனைவி அனுமதி அளித்ததாகவும் அசோக்குமார் தொர்ந்து சிறுமியைக் கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே செல்லக்கிளி நவம்பர் 7ஆம் தேதியன்று சிறுமியின் தந்தையிடம் சென்று உங்கள் மகளை நாங்கள் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். பின்பு, ஓகலூர் கிராமத்தில் உள்ள கோயிலில் வைத்து தன் கணவருக்கும் சிறுமிக்கும் செல்லக்கிளி திருமணம் செய்து வைத்துள்ளார்.
பின்னர் அவர்கள் இருவரையும் பெண்ணாடம் அருகே உள்ள கோனூர் கிராமத்தில் தங்க வைத்துள்ளார். அங்கு அசோக்குமார் சிறுமியை வற்புறுத்தி பலமுறை உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சிறுமியின் தந்தை செல்லக்கிளியிடம் என் மகள் எங்கே என்று கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. இதனால், சிறுமியின் தந்தை, தனது மகளை செல்லக்கிளி, மற்றும் அவரது கணவர் அசோக்குமார் ஆகியோர் கடத்திச் சென்றதாக விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கிருபா லஷ்மி தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது செல்லக்கிளி, சிறுமியை தனது கணவர் அசோக்குமாருடன் கடத்திச் சென்று அவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, 16 வயது சிறுமியை கடத்திச் சென்று வற்புறுத்தி திருமணம் செய்தது, பாலியல் வன்கொடுமை செய்தது ஆகிய குற்றங்களுக்காக செல்லக்கிளி-அசோக்குமார் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க : திருச்சியில் குழந்தை விற்பனை விவகாரத்தில் 3 பேர் கைது!