கடலூர்: இரு தினங்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழை (Heavy Rain) காரணமாக கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, பம்பை ஆறு, துரிஞ்சல் ஆறு ஆகிய ஆறுகளிலிருந்து சுமார் 70 ஆயிரம் கன அடி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
மேலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்துவரும் அதிக கனமழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கடலூர் நகரின் தென்பெண்ணை ஆற்றில் மிதமிஞ்சிய நீர் வெளியேற்றப்படுவதால் VSL நகர், நடேசன் நகர், குமரன் நகர், குறிஞ்சி நகர் ஆகியப் பகுதிகளில், வழிந்தோடிய வெள்ளநீர் சாலை வழியாகக் குடியிருப்புகளில் புகுந்தது.
மேலும் வெள்ளநீர் வீடுகளில் புகுந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் தற்காலிகமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று கடலூர் தாழங்குடா மற்றும் உச்சிமேடு ஆகியப் பகுதிகளில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தென்பெண்ணை ஆற்றின் அருகில் பாயும், கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகக் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: Viluppuram District Flood:முழுக் கொள்ளளவை எட்டிய வீடூர் அணையின் உபரி நீர் வெளியேற்றம்