அக்னி வெப்பம் தொடங்கும் முன்பே கடலூர் மாவட்டத்தில் அதிகளவு சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் கடலூர் சென்னை இடையே கரை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் வேகத்தால் திசைமாறிய புயல் ஓடிசாவை நோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டது. எனினும் கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றதுடன் காணப்பட்டது.
இதனால் நேற்று கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இரவு 7 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியதையடுத்து, 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
மேலும் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு, ராசாபேட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்ப்பட்ட கடற்கரையோரம் உள்ள மீனவ கிராமங்களில் முழுமையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. கடற்கரையோம் காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் முறிந்த மரங்களை மாவட்ட நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர்.